வலிதாங்கும் உளிகள்! - 2 போராளிகளின் உண்மை சம்பவங்கள்!

breaking

அன்றைய இரவை மழைதான் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தது. மறுநாள் காலை குறுந்தூர எறிகணைகள் நாலா பக்கமும் வீழ்ந்து வெடிக்க, துப்பாக்கிச் சூடுகள் அதிர அட்டகாசமாய்ப் பொழுது புலர்ந்தது.

எதிரியின் பரவலான சூடுகள் முன்னரங்கையும் பின்னரங்கையும் அதிர வைத்தன. காலைக்கடன்களைக் கூட முடிக்க வெளியில் தலை காட்ட முடியவில்லை. மழையில் நனைந்த காவலரண்களை எதிரி சீரமைக்கின்றான் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.இரவு மழையோடு மழையாக தேநீர் வைக்க ஒழுங்குபடுத்தியதால் தேநீர் மடடும் குடிக்க முடிந்தது.

காலை உணவு நேரமும் கடந்தது. மதிய உணவு நேரமும் தாண்டியது. ஆனால் எதிரி மட்டும் ஓய்வுக்கு வருவதாகத் தெரியவில்லை. பசி தெரியவில்லை.ஆனால் காலைக்கடன் முடிக்காமல் மட்டும் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க முடியும்.அதிலும் அன்பரசிக்கு மாத அசௌகரியம் வேறு. அவளது நிலமையைப் புரியமுடிந்தது.ஒரு சிறிய இடைவெளிகூட விடாமல் எதிரி அடித்துக் கொண்டே இருந்தான். காப்பரண் எந்த நேரம் இடிந்து விழும் என்று தெரியாது.இந்தளவு அடிக்கும் காப்பரண்கள் நின்று பிடிப்பதே பெரிய விசியம்தான்;.

மாலை 4.30 கடந்த நேரம் எதிரி மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டிருந்தான்.மாறி மாறி எல்லோரும் காலைக்கடன் முடிக்கச் சென்று வந்தார்கள்.வந்த வேகத்திலேயே மழையாலும் எறிகணைகளாலும் சிதைந்த காப்பரணைச் சீர் செய்தார்கள்.மழை வெள்ளம் உள்ளே வராமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.

“என்ன பிள்ளையல்…ஏதாவது உதவி செய்துதரவா…” கேட்டுக் கொண்டு கந்தசாமி; ஐயா வந்தார்.

“கந்தசாமிஐயா வாங்கோ….நாங்க எல்லாம் சரிபண்ணிப் போட்டம்… அதுசரி ஐயா இரவு பிறகு எப்படிப் போச்சு….”அகல் கேட்டாள்.

சும்மா சொல்லக்கூடாது பிள்ளையல் அந்த மழைக்குளிருக்கு நீங்க தந்த தேத்தண்ணி அமிர்தமா இருந்திச்சுப் பிள்ளையல்…அப்பவே எனக்கு பாதி இழுப்பு குறைஞ்ச மாதிரித்தான். பிறகு மருத்துவப் பிள்ளைகளும் வந்து மருந்து தந்தவை அதோட கொஞ்சம் கொஞ்சமாக் குறைஞ்சு போயிற்று. மழைக்குளிருக்கு வீட்டிலும் வாறதுதான் பிள்ள…அதுதான் இஞ்சவரேக்க மருந்தோட வந்தனான்.

“அதுசரி ஐயா நீங்க வந்ததுக்கு இண்டைக்குத்தான் நல்ல அடிபோல… பயம் வரவில்லையா….”எழில் கேட்டாள் .

“இல்லப்பிள்ள….பக்கத்தில நீங்கள் இருக்கிறயல்…அங்கால தம்பியாக்கள்…நாங்க நல்ல உஷாராத்தான் இருந்தனாங்கள். சண்ட வந்தா ஒரு கை பார்க்கலாம் எண்டுதான் இருந்தம்.”கந்தசாமிஐயாவின் முகத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் தெரிந்தது.

இவ்வளவு நேரத்துக்குச் சாப்பிடாமல் இருக்கிறீங்கள்….பசியா இல்லையா ஐயா.. பசி என்ன பசிஇநீங்க எல்லாரும்தானே சாப்பிடாமல்; இருக்கிறீங்கள். ஐயாவிடமிருந்து மிகத்தெளிவான பதில் வந்தது.

வீட்டில இருந்தா இந்தளவு நேரத்துக்க எத்தின தடவை தேநீர் குடிச்சிருப்பினம்….இரண்டு தடவையாவது சாப்பிட்டிருப்பினம்… வேலைக்கு அதுக்கு இதுக்கு என்று எத்தின தடவை வெளியில போய் வந்திருப்பினம்….ஆனா எல்லைக்கு வந்தா முழு நேரப் போராளிகளாகவே தங்கட கடமையச் சரிவரச் செய்கினம்.போராளிகள் படும் கடினங்களை எல்லாம் தாங்களும் சுமக்கினம். நினைக்கும் போதே பெருமையாக இருந்தது.

கந்தசாமி ஐயா எல்லைக்கு வந்த மறுநாள் கதைக்கும்போதே நிறைய விடயங்கள் பற்றிப் பேசியிருந்தார். நான் பிள்ள சுருட்டுப்பத்தாம இருக்க மாட்டன். காலையில எழும்பினா சுருட்டுப்பத்தினாத்தான் காலைக்கடன் முடிக்க முடியும். அதுபோல சாப்பிட்ட பிறகு ஒருக்காப் பத்தினாத்தான் சாப்பிட்டது பத்தியப்படும்.படுக்கைக்குப் போகமுதல் ஒருக்கா இழுத்தாத்தான் நித்திரைவரும். ஆனா நான் இங்க வரேக்க எல்லாத்தையும் விட்டிட்டுத்தான் வந்தனான் பிள்ள….ஏன் தெரியுமா?

இந்த இயக்கம் புனிதமானது.கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று நல்ல ஒழுக்கத்தோட வளர்க்கப்படடிருக்கு.எல்லாரும் பார்த்து ஆச்சரியப்படுற அளவுக்கு நேர்த்தியா வளர்ந்து நிற்குது….இந்தக் கட்டுப்பாடுகள இதில வந்து நிற்கிற நாளிலையாவது கண்டிப்பா கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறன் பிள்ள.

ஏனென்றா நாங்க செய்யிற இந்தச் சின்னச் சின்னத் தவறுகள்கூட நாளைக்கு இயக்கத்தப் பாதிக்கக்கூடாது…..இஞ்ச வந்து உங்களையெல்லாம் பார்த்த பிறகு, இந்தக்காடு கரம்பை எல்லாம் இரவு பகல் பாக்காம மழையிலும் குளிரிலும் கண்விழிச்சு நீங்க படுற கஸ்ரங்களப் பார்த்த பிறகு பின்னுக்குப் போகவே விருப்பம் இல்ல… உங்கட தியாகத்தில நாங்க குளிர் காய்ந்து கொண்டிருக்கின்ற குற்ற உணர்வு என்ர மனசு பூரா நிறைந்து கிடக்கு….ஐயா மனம் வருந்திச் சொன்னார்.

ஐயாவுக்குப் பொதுவாகவே பெண்பிள்ளைகள் மீது அதிக விருப்பம். அவருக்குக் கூட ஒரேயோரு பெண்பிள்ளைதானாம் அவளுக்குக்கூட விரைவில திருமணம் நடக்கப்போவதாகச் சொல்லியிருந்தார். மகளக் கட்டிக் கொடுத்திட்டா அங்கால என்ர கடமை முடிஞ்சிது. அதுக்குப்பிறகு உங்களோடையே வந்து முன்னரங்கிலேயே நின்றிருவன். இதுதான் ஐயாவின் பெரு விருப்பாக இருந்தது.

கந்தசாமி ஐயா முன்னரங்கில காவல் கடமையில நிற்கிற போராளிகள் பற்றி ,அதிலும் பெண் போராளிகள் பற்றி நல்லாகவே மதிப்பீடு செய்து வைத்திருந்தார்.

“ பிள்ள…நான் எல்லைக்கு வந்ததில இருந்து முன்னரங்கில நிற்கிற எல்லாப் பிள்ளைகளையும் பார்க்கிறன்…எங்வளவு மகிழ்ச்சியாக இருக்குத் தொரியுமா…” ஏனையா என்று கேட்டதற்கு ஐயா சொன்னபதில் வியப்பாக இருந்தது.

முன்னரங்கில தண்ணீர் என்பது எவ்வளவு பிரச்சனை….தண்ணீரைக் பொண்டு வந்து சேர்க்கிறது என்பது எவ்வளவு கடினம். அப்படிக் கொண்டுவாற தண்ணிதான் எல்லாத் தேவைக்குமே….அப்படி இருந்து கூட எந்த நேரமும் பளிச்சென்று முகம் கழுவி, மடிப்புக் குலையாத உடையோடு வலம் வரும் உங்களைப்பார்க்க எவ்வளவு பெருமையா இருக்குத் தெரியுமா….? ஐயா நற்சான்றுதல் வழங்கி இருந்தார்.

“தண்ணிய எப்படி மிச்சம் பிடிக்கிறது என்பத எங்களிட்ட இருந்துதான் எல்லாரும் கற்றுக் கொள்ள வேணும்…..நாங்க ஒரு டம்ளர் தண்ணீரில இரண்டு தடவை சோப்புப் போட்டு வடிவா முகம் கழுவுவம் ஐயா..... என்ன இருக்கிறதோ இல்லையோ…இருக்கிறத வைச்சு எப்படி எங்களையும், எங்களச்சுற்றி இருக்கின்ற சுற்றுச் சூழலையும் சுத்தமா வைச்சிருக்கிறது என்பத அனுபவம் எங்களுக்குக் கற்றுத் தந்திருக்கு…..” அகல் பெருமையோடு சொல்லியிருந்தாள்.

புரியுது பிள்ளையல்…..இந்தத் தண்ணி இல்லாக் காட்டுக்கையே உங்கட காவலரணச் சுற்றி பூங்கன்றுகள் வைத்து அழகுபடுத்தி வைத்திருக்கிறதப் பார்க்க வீட்டில இருக்கிற உணர்வுதான் வருகிது…. கந்தசாமி ஐயா மனதில் தோன்றுவதை எல்லாம் வெளிப்படையாகவே பேசுவார் அதனால் அவரை எல்லாருக்குமே பிடித்திருந்தது. “என்ன அகல் தங்கச்சி யோசனை பலமாப் போகுது….:” “ஒன்றும் இல்லை ஐயா….நாளைக்கு நீங்க வீட்ட போயிருவீங்க…. என்ன…உங்கட கடமை நாள் கெதியா முடிஞ்ச மாதிரி இருக்கு” அகல் சொன்னாள்.

அதற்கள் அன்பரசி உற்சாகமாக வந்தாள்.அக்கா இஞ்ச வந்து பாருங்கோ நான் வைத்த ரோசாச்செடி நாளைக்குப் பூக்கப்போகுது….அவள் அகலையும் கந்தசாமி ஐயாவையும் கையோடு அழைத்துச் சென்றாள். அழகாய் வளர்ந்து மொட்டுக்கள் தாங்கி நின்ற ரோசாச் செடியில் ஒருமொட்டு நாளை மலரத் தயாராகி நின்றது. இத்தனை குண்டு மழை நடுவிலும் செழுமையோடு நிமிர்ந்து நிற்கும் அந்த ரோசாச் செடி போல அன்பரசியின் முகமும் மகிழ்ச்சியில் பளிச்சென்று இருந்தது.

இஞ்ச பாருங்க சந்தசாமிஐயா….இது அன்பரசி விடுமுறையில வீட்ட போயிற்று வரேக்க கொண்டு வந்து வைச்சது….எப்படி வளர்திருக்கு என்று பார்த்தீங்களா….நாளைக்குப் பூக்கப் போகுது…அகல் சொல்ல அன்பரசியின் மகிழ்ச்சி அனைவரையும் தொற்றிக் கொண்டது.

“நான் வீட்டபோய் என்ர மனிசிக்கும் மகளுக்கும் உங்களப்பற்றி காவலரண் வாழ்க்கையைப் பற்றிக் கதைகதையாச் சொல்லுவன்….” சரி பிள்ளையல் இனி எனக்குத்தான் காவற் கடமை நான் போயிற்று வாறன்.மகிழ்வோடே விடைபெற்றார் கந்தசாமி ஐயா.

தொலைத் தொடர்புக்கருவியோடு இருந்த எழில் வந்தாள் “அக்கா இண்டைக்குச் சாப்பாடு வராது போல….சாப்பாடு கொண்டுவந்த வாகனத்துக்கு அடிவிழுந்திட்டாம் அவளது பேச்சில் சோர்வு தெரிந்தது. “என்ன எழில் பசிக்குதோ ….” சீச்சீ….இல்லையக்கா ….அவளது வாய்தான் சொன்னதே தவிர. அகத்தின் பிரதிபலிப்பு முகத்தில் தெரிந்தது.

எழில் போராட்ட வாழ்க்கைக்குப் புதியவள். வயதாலும் அனுபவத்தாலும் கூட அவள் இளையவள்தான். அவளது முதற்களமே இந்த முன்னரங்குதான்…..எந்த நேரமும் சுறுசுறுப்பாகச் சுற்றிக் கொண்டிருக்கும் போராளி அவள். ஆனால் அதிக நேரம் பசி மட்டும் தாங்க மாட்டாள். இன்று இவ்வளவு நேரம் சமாளித்து விட்டாள்.

அன்பரசி வித்தியாசமானவள் அளவுக்கதிகமாகவே அவளிடம் பொறுப்புணர்வு இருந்தது. அவளிடம் ஒருகுணம் எதையும் இலேசில் தூக்கி வீசமாட்டாள். ஏல்லாப் பொருட்களையும் ஆத்திர அவசரத்துக்கு உதவும் என்று பாதுகாத்து வைப்பாள்.

அவர்களுக்கு வரும் மதியஉணவில் சாப்பிட்டு எஞ்சியது போக மிஞ்சியதை ஒருபோதும் அவள் கொட்ட விடமாட்டாள். அதைப் பத்திரப்படுத்தி பழுது போகாமல் வெயிலில் காயவைத்து |அவல்| மாதிரிச் சேமித்து வைத்திருந்தாள்.

அந்த அவல் அவர்களுக்குப் பல வேளைகளில் முழுநேர உணவாகக் கூட இருந்திருக்கின்றது. இப்போதும் சாப்பாடு வரவில்லை என்று தெரிந்தவுடன் அன்பரசி அதைத்தான் எடுத்துக் கழுவி கொஞ்சச் சீனி சேர்த்துப் பிரட்டி எங்களுக்கும் எடுத்து ஐயாக்களுக்கும் கொண்டுபோய்க் கொடுத்தாள்.

“அக்கா ….சாப்பாடு கொண்டுவாற பாஸ்கரன் அண்ண வீரச்சாவாம்… நான் வந்து ஆறு மாதத்தில இது ஐந்தாவது வீரச்சாவு” கணக்குச் சொன்னாள் எழில்;. தொலைத் தொடர்புக் கருவி தாங்கிவரும் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது அவள்தான்.

உண்மையிலே களமுனைக்குச் சாப்பாட்டு வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களை களமுனைப் போராளிகள் ஒருபோதும் மறந்து விட மாட்டார்கள். சண்டையில நிற்கிற போராளிகளுக்கு சரியான நேரத்துக்குச் சாப்பாடு போய்ச் சேரவேண்டும் என்பதற்காக ஒயாது வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளுக்கு இடையே விரைவாக வாகனங்களைச் செலுத்திப் பத்திரமாய்க் கொண்டுவந்து சேர்க்கும் பணியை தங்கள் உயிர்களைக் கொடுத்துச் செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள். அந்த வரிசையில் இன்று பாஸ்கரன் அண்ணா….அவரை மனதால் நினைவுகூர மட்டும்தான் அவர்களால் முடிந்தது.

தொடரும்……

வலிதாங்கும் உளிகள்! – 01 போராளிகளின் உண்மை சம்பவங்கள்!

தாரகம் இணையத்திற்க்காக

அ.அபிராமி