முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கெருடமடு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக மணற் கொள்ளையர்களுடைய, சட்ட விரோத மண்ணகழ்வுச் செயற்பாடுகள் மிகத் தீவிரமான முறையில் இடம்பெற்றுவருகின்றன.
இந்த பகுதிகளினூடாக ஊடறுத்து பாய்கின்ற பேராற்றில் மிகவும் பாரிய அளவில் குழிகள் அகழப்படடு, இயற்கை சமநிலையை சீரழிக்கும் வகையில் இந்த மண்ணகழ்வுச் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் குறித்த சட்டவிரோத மண்ணகழ்வுச் செயற்பாடு தொடர்பில், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக அப் பகுதி மக்கள் முறையிட்டுவந்த நிலையில், புதுக்குடியிருப்புப் பிரதேசசபை உறுப்பினர்களான முத்துச்சாமி முகுந்தகஜன், சிறீக்குமரன் நிசாந்தி, நாகமணி வன்னியசிங்கம் ஆகியோர் (26.02) இன்று சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறும் குறித்த பகுதிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
குறிப்பாக ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவில் அமைந்துள்ள, கெருடமடுப் பகுதியில் பேரற்றில் மிகப் பாரிய அளவில் மண் அகழப்பட்டு ஆற்றுக்கு வெளியே மணல் குவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மணற்கொள்ளையர்கள் பிரதேசசபை உறுப்பினர்களின் வருகையையடுத்து மணல் அகழ்விற்காக பயன்படுத்திய கனகரக வாகனங்ளை அங்கிருந்து அவசர அவசரமாக எடுத்துச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
அத்துடன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வசந்தபுரம் பகுதியில், தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெறுகின்றது.
இவ்வாறாக தொடர்சியாக மணல் அகழப்பட்டு பாரவூர்திகளில் மணல் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதால் அக்கிராமத்தின் பிரதான வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலம் ஒன்று மிகப் பாரிய அளவில் சிதைடைந்துள்ளது.
குறித்த பாலத்தின் சிதைவு நிலைமைகளை குறித்த பிரதேசசபை உறுப்பினர்கள் பார்வையிடும்போது, அவ்விடத்திற்கு வந்த சில மணற் கொள்ளையர்கள் பிரதேசசபை உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் அவ்விடத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சுயாதீன ஊடகவியலாளரின் ஒளிப்படக்கருவியினை தள்ளிய குறித்த மணற்கொள்ளையர்கள், தாக்கவும் முற்ப்பட்டதோடு ஒளிப்படம் எடுக்ககூடாதெனவும் அச்சுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.